அறுவைசிகிச்சையில்லாமல் இருதய சிகிச்சை!

அறுவைசிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் நவீன இருதய சிகிச்சை
மியாட் ஆஸ்பத்திரியில் இன்று தேசிய அளவிலான கருத்தரங்கு




அறுவைசிகிச்சை இல்லாமல் ``பின்கோல்'' என்று அழைக்கப்படும் நவீன இருதய அறுவை சிகிச்சை பற்றிய தேசிய மாநாடு மியாட் ஆஸ்பத்திரியில் இன்று (சனிக்கிழமை,) தொடங்குகிறது.

நவீன இருதய அறுவை சிகிச்சை

இருதய அறுவைசிகிச்சை 4 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை நடைபெறுவது உண்டு. இருதயத்தில் உள்ள கோளாறைப்பொருத்து அறுவை சிகிச்சை அமையும்.

மயக்க இருதய அறுவைசிகிச்சையில் பெரும்பாலும் இருதயத்தை நிறுத்தி விட்டு அறுவை சிகிச்சை செய்வது உண்டு. மயக்க மருந்து கொடுக்காமல் திறந்த நிலையில் (ஓப்பன் ஹார்ட் சர்ஜரி) இருதய அறுவை சிகிச்சை செய்யாமல் நவீன முறையில் பின்கோல் சர்ஜரி சென்னை மியாட் ஆஸ்பத்திரியில் கடந்த மேமாதம் முதல் செய்யப்பட்டுவருகிறது.

விளக்கம்

பின்கோல் சர்ஜரி என்பது தொடையில் ஊசி போன்ற துவாரம் ஏற்படுத்தி அதில் உள்ள ரத்தக்குழாய் வழியாக மிக மெல்லிய கருவியை செலுத்தி அந்த கருவியை இருதயத்தில் பழுதடைந்த இடத்தில் பொருத்துவதே ஆகும். இந்த முறையில் பொருத்தப்படும் கருவி பாலியஸ்டர் துணி போன்றவற்றால் செய்யப்பட்டவையாகும். சில கருவிகள் வேறு வேறு பொருள்களில் செய்யப்பட்டிருக்கும். இவை இருதயத்தோடு அப்படியே சேர்ந்து கலந்து விடும்.

இந்த அறுவைசிகிச்சை அரை மணிநேரம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் முடிந்து விடும். அதுவும் மயக்கமருந்து கொடுக்காமல் ஒரு ஊசி மட்டும் போட்டு அறுவைசெய்யப்படும். ஆனால் என்ன நடக்கிறது என்பது அனைத்தும் நோயாளிக்கு தெரியும். அதுமட்டுமல்ல, அறுவை சிகிச்சை முடிந்தவுடன் நோயாளி எழுந்து நடக்கலாம்.

கருத்தரங்கு

இத்தகைய நவீன அறுவை சிகிச்சையான பின்கோல் சர்ஜரி பற்றிய நவீன தகவல்களை பறிமாற்றம் செய்வதற்கான தேசிய அளவிலான கருத்தரங்கு மியாட் ஆஸ்பத்திரியில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. மியாட் ஆஸ்பத்திரியின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ், மியாட் ஆஸ்பத்திரியின் நிறுவனர் டாக்டர் பி.வி.ஏ.மோகன்தாஸ் ஆகியோர் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார்கள்.

மாநாடு நாளையும் நடக்கிறது.

இது குறித்து டாக்டர் மோகன்தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கருத்தரங்கில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பின்கோல் சர்ஜரியில் நிபுணத்துவம் வாய்ந்த 57 டாக்டர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் இருதய சிகிச்சை நிபுணர்கள் பயிற்சி டாக்டர்கள் உள்பட 200 பேர் கலந்து கொள்கிறார்கள். 19 மருத்துவ சிறப்புரைகள் நிகழ்த்தப்பட உள்ளன. இருதய நோய்கள் பற்றியும் பின்கோல் சர்ஜரி பற்றியும் புதிய முறைகள், புதிய தொழில் நுட்பம் பற்றியும் கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக இன்றும் நாளையும் 6 குழந்தைகளுக்கு பின்கோல் சர்ஜரி செய்யப்பட உள்ளது. அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் வேதுஷ் (2) சவ்மியா (4), சுவேதா (5), ஆர்.மெர்சி, சங்கர் (18) , இளமலர் (21) ஆகியோர் நேற்று மியாட் ஆஸ்பத்திரியில் இருந்தனர். அவர்களுக்கு குறைந்த அளவு கட்டணம் தான் வாங்கப்படுகிறது.

இவ்வாறு டாக்டர் மோகன் தாஸ் தெரிவித்தார்.

மியாட் ஆஸ்பத்திரியின் குழந்தைகளுக்கான இருதய அறுவைசிகிச்சை துறை தலைவர் டாக்டர் சிவக்குமார் கூறியதாவது:-

பிறவியிலேயே இருதயத்தில் ஓட்டை இருத்தல், இருதயவால்வு சுருங்கி இருத்தல், ரத்தக்குழாய் சுருங்கி இருத்தல் உள்ளிட்ட குறைகளை போக்க பின்கோல் அறுவை சிகிச்சை ஏற்றதாகும். பிறந்து 2 நாட்களே ஆன குழந்தைக்கு கூட சர்ஜரி செய்து உள்ளோம். 8 பேருக்கு பின்கோல் சர்ஜரி செய்வதை கருத்தரங்கு திரையில் தெரியவைப்போம். அதை பார்த்து டாக்டர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்வார்கள். மேலும் அவர்களின் அனுபவ தொழில் நுட்பங்களையும் தெரிவிப்பார்கள்.

இவ்வாறு டாக்டர் சிவக்குமார் தெரிவித்தார்.

வாழ்த்து

ஆஸ்பத்திரி தலைவர் மல்லிகா மோகன்தாஸ் பின்கோல் சர்ஜரி செய்ய உள்ள குழந்தைகளிடம் தைரியமாக இருங்கள் பயப்படவேண்டாம் என்று கூறி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

0 comments: