1 யூனிட்டில் இருந்து 10 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்கிறார் தேனி மெக்கானிக்



குறைந்த செலவில் அதிக அளவு மின் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை தேனியைச் சேர்ந்த சல்லடை தயாரிப்பாளர் கண்டுபிடித்துள்ளார்.

தேனி சிட்கோ தொழிற்பேட்டையில் ராதா ஜெனரல் இன்டஸ்ட்ரீஸ் எனும் பெயரில் அரைவை மில்களுக்கு தேவையான சல்லடை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துபவர் வரதராஜன் (67).

இவர் மரபு சாரா எரிசக்தி மூலம் ஒரு எச்.பி. (குதிரை சக்தி) மின் சக்தியை கொண்டு 10 எச்.பி. மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். 12 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து பல லட்ச ரூபாய் செலவழித்து தற்போது 1 யூனிட் மின்சாரம் மூலம் 10 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை கண்டுபிடித்ததாக அவர் தெரிவித்தார்.

இது குறித்து வரதராஜன் மேலும் கூறியதாவது:

இதற்கான பார்முலாவை பயன்படுத்தி நாட்டுக்கு தேவையான மின்சாரத்தை மிக எளிதில் உற்பத்தி செய்து விடலாம். இதன்மூலம் வாகனங்கள், கப்பல் ஆகியவற்றை இயக்க முடியும், இதற்கு பெட்ரோலோ, டீசலோ தேவையில்லை. வாகனங்கள் இயக்கப்பட்டால் சத்தமோ, புகையோ ஏற்படாது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

என்னுடைய பார்முலா மூலம் ஒரு மடங்கு குதிரை சக்தி திறன் மின்சாரத்தை செலுத்தி 10 மடங்கு மின்சாரம் பெற முடியும். இதற்கான காப்புரிமையைப் பெற பதிவு செய்ய உள்ளேன். விற்பனை நோக்கில் இயந்திரம் கண்டுபிடிக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்து எனது கண்டுபிடிப்பை காட்டி விளக்குவேன்.

இவ்வாறு வரதராஜன் கூறினார்.