நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது - ஒய்.வி.ரெட்டி

உலக நாடுகளின் பொருளாதார நிலையில் நிலையற்ற தன்மை ஏற்பட்டாலும், இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான அளவில் வளர்ச்சி காணும். நடப்பு 2007-08-ஆம் ஆண்டில் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜி.டீ.பி) 8.5 சதவீத அளவிற்கு இருக்கும். அதேபோன்று நாட்டின் பணவீக்க விகிதம் 5 சதவீத அளவிற்குள் கட்டுக்குள் இருக்கும் என பாரத ரிசர்வ் வங்கியின் (ஆர்.பீ.ஐ) கவர்னர் ஒய்.வி.ரெட்டி தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சி

சென்னையில் கிரேட் லேக்ஸ் நிர்வாக இயல் பயிலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஒய்.வி.ரெட்டி மேலும் கூறும்போது, "உலகில் பல நாடுகளின் பொருளாதாரத்தில் அதிக ஏற்ற, இறக்கம் காணப் படுகிறது. இருப்பினும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும், உள்நாட்டு கடன் சந்தை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சவாலாக உள்ளது. பாரத ரிசர்வ் வங்கி, சர்வதேச பொருளாதார நடவடிக்கை களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போதைய நிலையில், உலக பொருளாதாரத்திற்கு வழி காட்டும் நிலையில் இந்திய பொருளாதாரம் உள்ளது. இருப்பினும், உலக பொருளாதார நடவடிக்கைகளையும், அவற்றில் ஏற்படும் மாற்றங்களையும் நாம் கவனிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

முதலீடுகள்

இதர நாடுகளில் 40 சதவீத அளவிற்கு முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. அதேசமயம், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீடு 30 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. இந்நிலையிலும், இதர நாடுகளையும் விஞ்சிடும் அளவில் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8 முதல் 9 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, முதலீடுகள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. மேலும், மத்திய அரசு, நாட்டின் பணவீக்க விகிதத்தை 3 சதவீத அளவிற்கு வைத்துள்ளது. இது, இதர சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானதாகும்.

பணவீக்க விகிதம்

பாரத ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களின்படி, மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்க விகிதம் 2007-ஆம் ஆண்டு ஏப்ரலில் 6 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இது, 2007-ஆம் ஆண்டு ஜுலை 14-ந் தேதியன்று 4.4 சதவீதமாக குறைந்திருந்தது. டிசம்பர் 1-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இது 3.75 சதவீதமாக உள்ளது.

நாட்டில் பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் உணவு தானியங்களின் விலையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பதற்கு மேற்கண்ட இரண்டு பொருள்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன என ரெட்டி குறிப்பிட்டார்.

வேளாண் துறை

அவர் மேலும் கூறும்போது, "பணம் மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. பல்வேறு துறைகளின் வளர்ச்சியை பொறுத்தே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அமைகிறது. உள்நாட்டிற்குள் வரும் முதலீடுகள் மிகவும் அதிகரித்து வருகிறது. அடிப்படை கட்டுமானம், மருத்துவம், கல்வி மற்றும் விவசாயம் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. இவை, நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய அம்சமாக திகழ்கின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வேளாண் துறையின் பங்களிப்பு 20 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதத்தினர் விவசாயத்தை நம்பியே உள்ளனர். எனவே, வேளாண் துறையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது இன்றியமையாததாகும்" என்று தெரிவித்தார்.

நிதி உதவி

இந்தியா மற்றும் சீனாவில் பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டிற்கும் மேல் வந்துள்ளனர். வேளாண் துறையில், அளப்பிற்கும், தேவைக்கும் இடையே உள்ள இடைவெளி நாட்டின் பொருளாதாரத்திற்கு தடைக்கல்லாக உள்ளது. எனவே, உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது. இதனை கருத்தில் கொன்டு, கடந்த ஒரு சில மாதங்களாக வேளாண் துறைக்கு வழங்கப்படும் கடன் களின் அளவு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய மேம்பாட்டு கவுன்சில், எதிர்கால உணவு பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது என ரெட்டி மேலும் தெரிவித்தார்.

-இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு,சென்னை
தரவு - தினதந்தி

0 comments: