முதலீட்டாளருக்கு விழிப்புணர்வு -‘செபி’ திட்டம்

பங்குச் சந்தையில் முதலீடு செய்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்திய பங்கு பரிவர்த்தனை அமைப்பு (செபி) திட்டமிட்டு உள்ளது. தேசிய அளவிலான விழிப்புணர்வு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.

இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை பற்றி மேலும் அதிக விவரங்களை தெரிவிக்க முடியும். இதனால் பங்குச் சந்தை மிகவும் ஒழுங்குமுறைகளுடன் வெளிப்படையாக செயல்பட உதவும் என செபி தலைவர் எம். தாமோதரன் தெரிவித்தார்.

“பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்பு, அதில் உள்ள அபாயங்களை முதலீட்டாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும். முதலீட்டுக்கு வருமானம் எவ்வளவு கிடைக்கும், இது தொடர்பான சட்ட விதிமுறைகள் ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் அறிய வேண்டும்‘‘ என்றார் தாமோதரன்.
இந்த ஆண்டு இறுதியில் விழிப்புணர்வு திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முதலீட்டாளர்கள் அமைப்புகள் இன்னும் ஏராளமாக அமைக்கப்பட வேண்டியது அவசியம். அப்போதுதான் மேலும் நிறைய முதலீட்டாளருக்கு விஷயங்கள் போய்ச்சேரும் என்றார்.
கடந்த ஆண்டு வரை 8 முதலீட்டாளர் அமைப்புகள்தான் இருந்தன. தற்போது இது 28 ஆக அதிகரித்துள்ளது என்றார் அவர்.

வளர்ந்த நாடுகளின் பங்குச் சந்தையோடு ஒப்பிடும்போது, இந்திய பங்குச் சந்தை மிகவும் ஒழுங்குமுறைகளுடன் சிறப்பாகச் செயல்படுகிறது. பரிவர்த்தனைகளும் மிக வேகமாக நடக்கின்றன என்றார்.

பங்குச் சந்தையில் தீவிரவாதிகள் முதலீடு செய்கிறார்களா என்பது குறித்து செபியிடம் எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்த தாமோதரன், தீவிரவாதிகள் யாரேனும் முதலீடு செய்கிறார்களா என பார்ப்பது செபியின் பணி அல்ல. இந்த மாதிரியான சட்டவிரோத பண பரிமாற்றங்களை ஆராய்ந்து, பணம் எங்கிருந்து வந்தது என விசாரிக்க வேண்டியது வங்கிகளின் பொறுப்பு என்றார் அவர்.

தனியார் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு அளவுக்கு அதிகமாக சம்பளம் தரப்படுவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இவ்விஷயத்தில் கம்பெனிகளின் பங்குதாரர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றார்.

0 comments: