மானியங்களை ரத்து செய்ய பிரதமர் யோசனை?

கடந்த ஒரு ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி வரை மானியமாக வழங்கப்பட்டும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர் மன்மோகன்சிங், பலன் கிடைக்காத மானியங்களை ரத்து செய்யலாம் என்றும் யோசனை தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள பொருளாதார வளர்ச்சி மையத்தின் பொன்விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது-

மானியம் ரத்து?

"மக்கள் இடையே ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, ஏழைகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் மானியம் வழங்கி வருகிறோம். நடப்பு நிதியாண்டில் இந்த மானியம் ரூ.1 லட்சம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், இப்படி மானியம் வழங்குவதன் மூலம் நாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பதுதான் வேதனை.

மானியங்கள் ஏழைகளை சென்று அடையவில்லை என்றால், மானியம் வழங்குவதன் உண்மையான நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். எனவே, எதிர்பார்க்கும் பலன் கிடைக்காத மானியங்களை ரத்து செய்வது பற்றி பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

புதிய கொள்கை

நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு உள்ள கிராம மக்களுக்கு விவசாயத்துறையினால் மட்டும் வேலைவாய்ப்பு வழங்க முடியாது. எனவே விவசாயம் சாராத துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கொள்கைகளை வகுப்பது அவசியமாகும். கிராமங்கள்- நகரங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு இடையே வளர்ச்சி விகிதத்தில் இடைவெளி அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நாட்டின் வளர்ச்சி விகிதத்தை நிலையாக வைத்திருக்க முதலீடு மற்றும் சேமிப்பு விகிதங்களை அதிகரிக்கவேண்டும். இன்றைய சூழ்நிலையில் நாட்டுக்கு தேவை விவசாயமா? தொழில் துறையா? என்ற விவாதம் அல்ல. விவசாயம், தொழில் மற்றும் கிராமம், நகரம், நாடு என ஒட்டு மொத்த வளர்ச்சிக்கான புதிய கொள்கை அவசியம்.''

இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.

தரவு - தினதந்தி

0 comments: