பங்குச் சந்தை... அதிருதுல்ல...!

-சேதுராமன் சாத்தப்பன்

இறங்குமா... இறங்கிடுச்சுன்னா... என்ற பதைபதைப்புடன் ஒவ்வொரு நாளும் பங்குச் சந்தையை உற்று நோக்கும் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் தான் அதிகம். இது பயமா அல்லது எச்சரிக்கையுடன் அணுகுகிறார்களா என்பது புரியாத புதிர். பங்குச்சந்தை சரிந்து கொண்டே இருந்தால், எப்போத்தான் ஏறுமோ என அங்கலாய்ப்பதும். ஏறிக் கொண்டே இருந்தால், பாரு சட்டுன்னு ஒரு நாளைக்கு அடிவாங்கத்தான் இப்படி ஏறிக்கொண்டு இருக்கும் என பலரும் புலம்புவதை கேட்க முடியும்.

இந்த மாதிரி புலம்புபவர்கள் எல்லாருமே பங்குச் சந்தையில் பணத்தை விட்டவர்களாகத்தான் இருப்பார்கள். இவர்கள் அனைவருமே பங்குச் சந்தையை பணம் காய்க்கும் மரம் என நினைத்து வந்து ஏமாந்தவர்களாக இருப்பார்கள். உலக நாடுகளில் பங்குச் சந்தைகள் நன்றாக இருப்பதும், நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் நன்றாக இருப்பதால் பங்குச் சந்தை தொடர்ந்து ஏறிக்கொண்டு இருக்கிறது. இதுதான் உண்மை. பங்குச் சந்தையை நீண்ட கால முதலீடாக பார்ப்பவர்களுக்கு இது அமுதசுரபி என்றால் அது மிகையில்லை.

இதுவரை பங்குச் சந்தையில் ஈடுபடாதவர்கள் நாமும் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா என்று பலரும் நினைக்கும் அளவுக்கு பங்குச் சந்தை உச்சத்தில் போய் நிற்கிறது. வாரம் ஒரு புதிய உச்சத்தை எட்டுகிறது. இந்த வாரம் மும்பை பங்குச் சந்தை 15,565 புள்ளிகளுடன் முடிவடைந்தது. இது ஒரு புதிய அளவாகும். பதினைந்து வருடங்களுக்கு முன், பங்குச் சந்தை பங்கு நிலவரங்களை உடனடியாக தெரிந்து கொள்ள 'ஸ்டாக் எக்சேஞ்சு'க்கு சென்றால் தான் தெரிந்து கொள்ள முடியும். ஆதலால், ஆர்வமுள்ளவர்கள் பங்குச் சந்தைகளுக்கு முன் கூடி நிற்பர். தற்போது நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், வீட்டில் இருந்தபடியே நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம்; வர்த்தகத்தில் ஈடுபடலாம் என்ற நிலை வந்தவுடன் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். குஜராத் போன்ற மாநிலங்களில் காய்கறி விற்பவர்களில் இருந்து பால்காரர் வரை பங்குச் சந்தை நிலவரம் பேசும் அளவுக்கு முன்னேறியுள்ளனர். மும்பை பங்குச் சந்தை தன்னுடைய நடவடிக்கைகளை, நிலவரங்களை தற்போது குஜராத்தி மொழியிலும் வெளியிட ஆரம்பித்துள்ளது.

இந்த வார முக்கிய நிகழ்வாக டி.சி.எஸ்., கம்பெனியின் முடிவுகளை சொல்லலாம். சென்ற வாரம் வெளிவந்த இன்போசிஸ் கம்பெனியின் முடிவுகளை வைத்து பார்த்தபோது டி.சி.எஸ்., கம்பெனியின் முடிவுகள் எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருக்கும் என பலர் அபிப்பிராயம் தெரிவித்து இருந்தனர்.

ஆனால், அந்த கம்பெனியின் முடிவுகள் எதிர்பார்த்ததற்கு எதிராக நன்றாக இருந்ததால், பங்குச் சந்தையை தூக்கிச் சென்றது. தொடர்ந்து வந்த சில கம்பெனிகளின் (எல் அண்டு டி ரான்பாக்கி மற்றும் டி.எல்.எப்.,) முடிவுகளும் அதுபோலவே இருந்ததால் வாரம் முழுவதும் பங்குச் சந்தை களை கட்டியிருந்தது.

திங்களன்று துவக்கமே சிறிது ஏற்றத்துடன தான் ஆரம்பித்தது. முடிவாக 32 புள்ளிகள் மேலே சென்றது. கன்ஸ்ட்ரக்ஷன் பங்குகள் மேலே சென்றன. திங்களன்று மாலை வெளிவரும் டி.சி.எஸ்., கம்பெனியின் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற பயமும் சந்தையில் சிறிது தெரிந்தது.

மூன்று தினங்களாக மேலேயே சென்று கொண்டிருந்த பங்குச் சந்தை, செவ்வாயன்று சந்தை ஒரு குறைந்த மூடிலேயே இருந்தது. அன்றைய தினம் மேலும், கீழுமாக சென்று கொண்டிருந்த சந்தை முடிவாக 21 புள்ளிகள் சரிந்தது. நல்ல ரிசல்ட்டால் டி.சி.எஸ்., கம்பெனியின் பங்குகள் மேலே சென்றது.

செவ்வாய்க்கிழமை போலத் தான் இருந்தது புதன் கிழமையும். ஒரு 'டல்'லான நாளில் 11 புள்ளிகள் மட்டுமே மேலே சென்றது.

ரான்பாக்சி மற்றும் எல்.டி., கம்பெனிகளின் அருமையான காலாண்டு முடிவுகள் ரிலையன்ஸ் கம்பெனிக்கு சாதகமாக கிடைத்த காஸ் விலை சம்பந்தப்பட்ட கோர்ட் தீர்ப்பு ஆகியவை பங்குச் சந்தையை வியாழனன்று தூக்கிச் சென்றது. முடிவில் 248 புள்ளிகள் அதிகமானது. 67 பங்குகள் புதிய அளவை எட்டின.

வெள்ளியன்று, வியாழனின் மூடிலேயே பங்குச் சந்தை துவங்கியது. ஏறுவதும், இறங்குவதுமாக இருந்த பங்குச் சந்தை முடிவாக 15 புள்ளிகள் அதிகமாகி முடிவடைந்தது. வெள்ளியன்று இறுதியில் மும்பை பங்குச் சந்தை 15,565 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 4,566 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. இது ஒரு சாதனை அளவாகும். சாதனைகள் ஏற்படுத்தப்படுவதே முறியடிப்பதற்காக தானே. மக்களிடம் அபரிமிதமாக புழங்கும் பணம், அவர்களின் மூடு ஆகியவை பங்குச் சந்தையை மேலே கொண்டு செல்லலாம். அடுத்த வாரம் பல புதிய வெளியீடுகள் வருகிறது. குறிப்பாக மத்திய அரசாங்கத்தின் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் புதிய வெளியீடு வருகிறது. இது ஒரு பெரிய வெளியீடு ஆகும். ஆதலால் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். மார்க்கெட்டில் தற்போது இந்த வெளியீட்டுக்கு 30 முதல் 36 வரை பிரிமீயம் கிடைப்பதாக செய்திகள் வெளிவருகின்றது. முதலீடு செய்யலாம். சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த 'எவரான்' என்ற நிறுவனம் புதிய வெளியீடைக் கொண்டு வந்தது. அந்த வெளியீடு 125 தடவைக்கு மேல் உடன்பாடு செய்யப்பட்டு ஒரு சாதனை படைத்தது.

'ஸ்பைஸ் டெலிகாம்' புதிய வெளியீடு இந்த வாரம் மும்பை பங்குச் சந்தையில் பட்டியல் செய்யப்பட்டது. ரூ.46 க்கு வெளியிடப்பட்ட பங்குகள் முதல் நாள் 62 வரை விற்கப்பட்டது. பரவலாக போட்டவர்கள் எல்லாருக்கும் கிடைத்த வெளியீடு இது. ஆதலால், எல்லாரும் லாபம் அடைந்தனர். வெள்ளியன்று முடிவடைந்த 'ஓமேக்ஷ்' என்ற டில்லியைச் சேர்ந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் புதிய வெளியீடு 70 தடவைகளுக்கு மேல் செலுத்தப்பட்டு உள்ளது. பங்குகள் கிடைப்பவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். சமீப காலமாக யாரும் வேண்டாத கன்ஸ்ட்ரக்ஷன், சிமென்ட் போன்ற துறைகள் மறுபடியும் விருப்பமான துறைகளாக கருதப்படுகிறது.

இத் துறைகளின் பங்கு விலைகள் கூடிக் கொண்டே போகிறது. சந்தை மிகவும் கீழே இறங்குமா? இது ஒரு பெரிய கேள்விக் குறிதான். இந்திய பங்குச் சந்தை உலகச் சந்தைகளின் போக்கிலேயே போவதால், உலகளவில் ஏதேனும் கரெக்ஷன் வருமானால் அது இங்கேயும் எதிரொலிக்கும். அதுவரை மேலே செல்ல வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும்'நிப்டி' க்கும் 'நிப்டி பியூச்சரு'க்கும் புள்ளிகள் வித்தியாசம் இருப்பதால் பங்குச் சந்தை ஆட்டம் காண்பதற்கு அறிகுறியாக இருக்கலாம் அனுபவஸ்தர்கள் கோடிட்டு காட்டுகின்றனர். சீனா வட்டி வீதங்களை கூட்டி உள்ளது என்ற செய்தி வெள்ளியன்று சந்தை முடிவடைந்த பிறகு வந்த செய்தி. மேலும், பண வீக்கம் 4.27 சதவீத அளவில் உள்ளது என்பதாகும். இவை பங்குச் சந்தையை திங்களன்று எவ்வாறு பாதிக்கப் போகிறது என்று காத்திருந்து பார்க்க வேண்டும்.



அறுவைசிகிச்சையில்லாமல் இருதய சிகிச்சை!

அறுவைசிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் நவீன இருதய சிகிச்சை
மியாட் ஆஸ்பத்திரியில் இன்று தேசிய அளவிலான கருத்தரங்கு




அறுவைசிகிச்சை இல்லாமல் ``பின்கோல்'' என்று அழைக்கப்படும் நவீன இருதய அறுவை சிகிச்சை பற்றிய தேசிய மாநாடு மியாட் ஆஸ்பத்திரியில் இன்று (சனிக்கிழமை,) தொடங்குகிறது.

நவீன இருதய அறுவை சிகிச்சை

இருதய அறுவைசிகிச்சை 4 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை நடைபெறுவது உண்டு. இருதயத்தில் உள்ள கோளாறைப்பொருத்து அறுவை சிகிச்சை அமையும்.

மயக்க இருதய அறுவைசிகிச்சையில் பெரும்பாலும் இருதயத்தை நிறுத்தி விட்டு அறுவை சிகிச்சை செய்வது உண்டு. மயக்க மருந்து கொடுக்காமல் திறந்த நிலையில் (ஓப்பன் ஹார்ட் சர்ஜரி) இருதய அறுவை சிகிச்சை செய்யாமல் நவீன முறையில் பின்கோல் சர்ஜரி சென்னை மியாட் ஆஸ்பத்திரியில் கடந்த மேமாதம் முதல் செய்யப்பட்டுவருகிறது.

விளக்கம்

பின்கோல் சர்ஜரி என்பது தொடையில் ஊசி போன்ற துவாரம் ஏற்படுத்தி அதில் உள்ள ரத்தக்குழாய் வழியாக மிக மெல்லிய கருவியை செலுத்தி அந்த கருவியை இருதயத்தில் பழுதடைந்த இடத்தில் பொருத்துவதே ஆகும். இந்த முறையில் பொருத்தப்படும் கருவி பாலியஸ்டர் துணி போன்றவற்றால் செய்யப்பட்டவையாகும். சில கருவிகள் வேறு வேறு பொருள்களில் செய்யப்பட்டிருக்கும். இவை இருதயத்தோடு அப்படியே சேர்ந்து கலந்து விடும்.

இந்த அறுவைசிகிச்சை அரை மணிநேரம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் முடிந்து விடும். அதுவும் மயக்கமருந்து கொடுக்காமல் ஒரு ஊசி மட்டும் போட்டு அறுவைசெய்யப்படும். ஆனால் என்ன நடக்கிறது என்பது அனைத்தும் நோயாளிக்கு தெரியும். அதுமட்டுமல்ல, அறுவை சிகிச்சை முடிந்தவுடன் நோயாளி எழுந்து நடக்கலாம்.

கருத்தரங்கு

இத்தகைய நவீன அறுவை சிகிச்சையான பின்கோல் சர்ஜரி பற்றிய நவீன தகவல்களை பறிமாற்றம் செய்வதற்கான தேசிய அளவிலான கருத்தரங்கு மியாட் ஆஸ்பத்திரியில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. மியாட் ஆஸ்பத்திரியின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ், மியாட் ஆஸ்பத்திரியின் நிறுவனர் டாக்டர் பி.வி.ஏ.மோகன்தாஸ் ஆகியோர் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார்கள்.

மாநாடு நாளையும் நடக்கிறது.

இது குறித்து டாக்டர் மோகன்தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கருத்தரங்கில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பின்கோல் சர்ஜரியில் நிபுணத்துவம் வாய்ந்த 57 டாக்டர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் இருதய சிகிச்சை நிபுணர்கள் பயிற்சி டாக்டர்கள் உள்பட 200 பேர் கலந்து கொள்கிறார்கள். 19 மருத்துவ சிறப்புரைகள் நிகழ்த்தப்பட உள்ளன. இருதய நோய்கள் பற்றியும் பின்கோல் சர்ஜரி பற்றியும் புதிய முறைகள், புதிய தொழில் நுட்பம் பற்றியும் கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக இன்றும் நாளையும் 6 குழந்தைகளுக்கு பின்கோல் சர்ஜரி செய்யப்பட உள்ளது. அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் வேதுஷ் (2) சவ்மியா (4), சுவேதா (5), ஆர்.மெர்சி, சங்கர் (18) , இளமலர் (21) ஆகியோர் நேற்று மியாட் ஆஸ்பத்திரியில் இருந்தனர். அவர்களுக்கு குறைந்த அளவு கட்டணம் தான் வாங்கப்படுகிறது.

இவ்வாறு டாக்டர் மோகன் தாஸ் தெரிவித்தார்.

மியாட் ஆஸ்பத்திரியின் குழந்தைகளுக்கான இருதய அறுவைசிகிச்சை துறை தலைவர் டாக்டர் சிவக்குமார் கூறியதாவது:-

பிறவியிலேயே இருதயத்தில் ஓட்டை இருத்தல், இருதயவால்வு சுருங்கி இருத்தல், ரத்தக்குழாய் சுருங்கி இருத்தல் உள்ளிட்ட குறைகளை போக்க பின்கோல் அறுவை சிகிச்சை ஏற்றதாகும். பிறந்து 2 நாட்களே ஆன குழந்தைக்கு கூட சர்ஜரி செய்து உள்ளோம். 8 பேருக்கு பின்கோல் சர்ஜரி செய்வதை கருத்தரங்கு திரையில் தெரியவைப்போம். அதை பார்த்து டாக்டர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்வார்கள். மேலும் அவர்களின் அனுபவ தொழில் நுட்பங்களையும் தெரிவிப்பார்கள்.

இவ்வாறு டாக்டர் சிவக்குமார் தெரிவித்தார்.

வாழ்த்து

ஆஸ்பத்திரி தலைவர் மல்லிகா மோகன்தாஸ் பின்கோல் சர்ஜரி செய்ய உள்ள குழந்தைகளிடம் தைரியமாக இருங்கள் பயப்படவேண்டாம் என்று கூறி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

நான்கில் மூன்று பங்கு இந்தியருக்கு ஆயுள் காப்பீடு இல்லை

நான்கில் மூன்று பங்கு இந்தியருக்கு ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம் இல்லை என்று பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான நேஷ னல் கவுன்சில் ஆஃப் அப்ளைடு எகனாமிக் ரிசர்ச் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியர்களின் வருவாய், செலவு, சேமிப்பு பற்றி இந்த ஆய்வில் 63 ஆயிரம் குடும்பங் களிடம் கேள்விகள் கேட்கப் பட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. தங்களுக்கு எந்தவித அசம் பாவிதமும் நடந்து விடாது என்றும் சேமித்து வைத்துள்ள பணத்தைக் கொண்டு குடும் பத்தினர் நன்கு வாழலாம் என்றும் பலர் கூறியுள்ளனர். ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளாமல் இருக்க இதுதான் காரணம்.

ஆயுள் காப்பீடு செய்து கொண்டவர்களில் 14 விழுக் காட்டினர் மட்டும்தான் பெண்கள். இதுபற்றிய போதிய விழிப் புணர்வு மக்களிடையே இல்லை.உத்தரப்பிரதேசத்தில் 42 சதவிகித குடும்பங்கள் தங்கள் சேமிப்பைத் தங்கள் வீட்டிலேயே வைத்து இருக்கின்றனர். அவர்கள் எதிலும் முதலீடு செய்வதில்லை. 54 சதவிகிதம் பேர் வங்கிகளில் முதலீடு செய்கின்றனர்.
74 சதவிகிதம் மக்கள் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கின் றனர். ஆனால் 14 சதவிகிதம் பேர் தான் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

சேமிக்கும் விஷயத்தில் இந்தியர்கள் சாமர்த்தியசாலிகள் என்றாலும், அதை எப்படி புத்திசாலித்தனமாக சேமிப்பது என்பதுதான் தெரியவில்லை. 81 சதவிகித இந்தியர்கள் பணத்தை சேமித்தாலும், அவர்களின் அந்தப் பணம் அவர்கள் வீட்டிலோ, வங்கியிலோதான் உள்ளது. வேறு திட்டங்களில் இல்லை. குழந்தைகளின் கல்வி, அவசரத் தேவை, வயதான பிறகு பயன்படும் என்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காக மக்கள் அதிக அளவில் சேமிக்கின்றனர்.

பொதுவாகக் காணும்போது, வரி கட்டுவதில் இருந்து தப்பிக்க உதவும் வழியாகத்தான், ஆயுள்காப்பீடு கருதப்படுகிறதே தவிர, அது பொருளாதார ரீதியிலான பாதுகாப்பு என்பதை அநேகர் கவனிப்பதில்லை.

இறால் மீன்களை தாக்கும் வெண்புள்ளி நோய் - ஆண்டிற்கு ரூ.500 கோடி நஷ்டம்

"இறால் மீன்களை வெண்புள்ளி நோய் தாக்கு வதால் இந்தியாவில் ஆண்டிற்கு 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது,'' என சென்னையில் நடந்த உவர்நீர் மீன் வளர்ப்பு கருத்தரங்கில் இந்திய மீன்வளர்ப்பு மைய தலைவர் சக்திவேல் பேசினார்.

இறால் வளர்ப்பில் மண் மற்றும் நீரின் முக்கியத்துவம், அவை சார்ந்த அம்சங்கள் குறித்து விவாதிக்கும் வகையில், மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் "உவர்நீர் மீன் வளர்ப்பு அமைவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு' என்னும் தலைப்பில் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடந்தது. கருத்தரங்கை கேரள வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சைலஸ் துவக்கி வைத்தார்.

அமெரிக்க ஆஃபர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சி.இ.பாய்டு, ரௌஸ், இந்திய கடல்மீன் ஆராய்ச்சி கழகத்தின் துணை இயக்குனர் திவான் ஆகியோர் பேசினர். கருத்தரங்கில் இந்திய மீன் வளர்ப்பு மைய தலைவர் சக்திவேல் பேசியதாவது: பசுமைப்புரட்சிக்கு விளைநிலங்களின் புரிந்துணர்வு எப்படி காரணமாக அமைந்ததோ, அதுபோல் நீலப்புரட்சிக்கு இறால் மீன் வளர்ப்பு காரணமாகி வருகிறது. இந்தியாவில் 1.4 லட்சம் ஹெக்டேர் பரப்பில் இறால் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இறால் வளர்ப்பில் மண் மற்றும் நீரின் மேம்பாடு மிகவும் முக்கியம். இறால் மீன்களை வெண்புள்ளி நோய் தாக்குவதால் இந்தியாவில் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் வெண்புள்ளி நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. செயற்கை முறையில் மீன்வளத்தை பெருக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை அருகே முட்டுகாட்டில் இரண்டு கோடி ரூபாய் செலவில் கொடுவா மீன் வளர்ப்பு நிலையம் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடல் விஞ்ஞானிகள், மீனவர்கள், விவசாயிகள் ஆகியோர் மத்தியில் இன்று வரை நல்லுறவு இல்லை. கடல்சார் விஞ்ஞானிகள் நீலப்புரட்சிக்கான தங்கள் ஆராய்ச்சிகளோடு, தொழில்நுட்பங்களையும் எடுத்து கொண்டு மீனவர்களை நாடிச்செல்ல வேண்டும். மீனவர் கிராமங்களில் தொழில்நுட்ப சேவை மையம், உவர்நீர் மீன் வளர்ப்பு சேவை மையங்கள் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். கடலோரங்களில் சுத்தம் இல்லாத நிலையை அகற்றி, மீனவர்கள் தங்கள் பொருட்களை நல்ல முறையில் பேக்கிங் செய்து, நுகர்வோருக்கு வழங்கும் வகையில் வசதிகள் செய்யப்பட வேண்டும்.இவ்வாறு சக்திவேல் பேசினார். கருத்தரங்கு ஏற்பாடுகளை மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலைய இயக்குனர் பொன்னையா தலைமையில் மைய ஆராய்ச்சியாளர்கள் செய்திருந்தனர்.

தமிழகத்தில் மீண்டும் கள்?

கள் இறக்க அனுமதிப்பது குறித்து அரசு சாதகமாக பரிசீலிக்கலாம்' என்று கருத்து தெரிவித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இதைத் தொடர்ந்து, "அரசு மீண்டும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும்' என்ற தமது நீண்ட நாள் கோரிக்கையை மீண்டும் உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன நாடார் சங்கங்கள்.

ஆனால் இதை அரசு அனுமதிக்கக்கூடாது என்று தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரிய தலைவர் குமரி ஆனந்தன் அறிவித்திருப்பதால் பரபரப்பில் இருக்கின்றனர் பனைத் தொழிலாளர்கள் மற்றும் நாடார் சங்கங்கள். தமிழகத்தில் தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க, தமிழக அரசு கடந்த இருபது வருடங்களுக்கு முன்பே தடைவிதித்தது.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கள் இறக்கும் தொழில் செய்து வந்த பனைத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். எனவே "உடலுக்குக் கேடு விளைவிக்காத, மருத்துவக் குணம் கொண்ட தனிப் பதனீர் எனும் கள்ளை தென்னை மற்றும் பனை மரங்களிலிருந்து இறக்கி விற்க அரசு அனுமதி தர வேண்டும்' என்று நீண்ட நாட்களாகவே அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர் பனைத் தொழிலாளர்கள். நாடார் சங்கங்களும் போராட்டங்களில் ஈடுபட்டன.

சமீபத்தில்கூட இதற்காகவே தூத்துக்குடி வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்! தி.மு.க. உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும், "கள் இறக்கும் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிப்போம்' என்று தங்களது தேர்தல் அறிக்கைகளில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு புறமிருக்க, விருதுநகரைச் சேர்ந்த நாடார் பேரவை பிரமுகர் ராமவேலு என்பவர், கள் இறக்கி விற்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் தர்மராவ் மற்றும் பழனிவேலு ஆகியோர் முன்னிலையில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த விசாரணையின் போது, ""விஸ்கி, பிராந்தி போன்ற மது வகைகளை விற்கும் அரசு, கள்ளுக்கு மட்டும் தடைவிதிப்பது ஏன்?'' என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ""இந்தக் கோரிக்கை குறித்து அரசு சாதகமாகப் பரிசீலிக்கலாமே'' என்று கருத்து தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், ""அரசு இதை கனிவோடு பரிசீலித்து வருகிறது'' என்று சொன்ன பின்னர் மீண்டும் இந்தப் பொதுநல வழக்கு கடந்த 25ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.

இப்போது இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு ஒரு வார அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், "கள் இறக்க அனுமதி தர வேண்டும்' என்பதை வலியுறுத்திப் போராடி வரும் பல்வேறு நாடார் அமைப்பு தலைவர்களிடம் பேசினோம். நாடார் பேரவை தலைவர் எர்ணாவூர் நாராயணன் நம்மிடம், ""கடந்த 20 வருடங்களில் அடுத்தடுத்து வந்த அரசுகள் பனைத் தொழிலாளர்களின் நலனைப் புறக்கணித்துவிட்டன.

இது ஒரு பெரிய கம்யூனிட்டியின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினை. தற்போது கள் இறக்க அனுமதி அளிப்பது குறித்து சாதகமாகப் பரிசீலிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பதால் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு நீக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. எங்களது இயக்கத்தில் பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இருப்பதால் இந்தப் பிரச்சினையை அரசியல் கலப்பு இல்லாமல்தான் கொண்டு செல்கிறோம்.

மது என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. டாஸ்மாக்கில் அதிக விலையுள்ள விஸ்கி மற்றும் பிராண்டியை விற்கும் தமிழக அரசு, உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்காத கள்ளை மட்டும் தடை செய்வது ஏன்? ஆகவே நாங்கள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குக் காத்திருக்கிறோம். அரசு கள் இறக்க இருக்கும் தடையை நீக்கினால் தமிழகத்தில் 30 லட்சம் பனைத் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்'' என்றார்.

இதையே வேறு விதமாகச் சொல்கிறார் நாடார் பேரவையின் பொருளாளரும், சரத்குமார் ரசிகர்மன்ற மாநிலச் செயலாளருமான கரு.நாகராஜன். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அரசு கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று வழக்குப் போட்ட நாடார் பேரவையைச் சேர்ந்த ஆர்.ராமவேலு தற்போது உயிருடன் இல்லை என்பதால் இவர்தான் தற்போது வழக்கை நடத்தி வருகிறார்.

அவர் நம்மிடம், ""எங்களது முக்கிய கோரிக்கை பனைத் தொழிலாளர்களிடமிருந்து கள்ளை அரசே கொள்முதல் செய்து பதப்படுத்தி விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான்! எனவேதான் நீதிமன்றத் தீர்ப்புக்குக் காத்திருக்கிறோம்'' என்கிறார்.
தமிழ்நாடு நாடார் இளைஞர் பேரவையைச் சேர்ந்த கரிக்கோல்ராஜ், ""அரசே கள்ளுக்கடையைத் திறந்து நடத்த வேண்டும்.

அப்படியில்லையென்றால் குறைந்த பட்சம் பனைத் தொழிலாளர்கள் கள்ளை இறக்கி விற்றுக் கொள்ளவாவது அரசு அனுமதிக்க வேண்டும். அதோடு இளநீரைப் பதப்படுத்தி பாக்கெட்டுகளில் விற்பது போன்று பதநீரையும் பதப்படுத்தி அரசு விற்கலாம்.

இதை எல்லாம் செய்யாமல் எங்களது நலன் குறித்து அக்கறையோடு இருப்பதாக நாடகமாடுகிறது அரசு. நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகாவது அரசு நல்ல ஒரு முடிவு எடுக்க வேண்டும்'' என்று ஆவேசப்பட்டார் கரிக்கோல்ராஜ்.

பனைத் தொழிலாளர்கள் நல சங்கத்தின் பொதுச் செயலர் ராயப்பன், ""பனையில் இருந்து கிடைக்கும் பதநீரைக் காய்ச்சி கருப்பட்டி தயாரித்துதான் பனைத் தொழிலாளி பிழைக்க வேண்டுமென்றால் பனைத் தொழிலாளியின் குடும்பமே தொழில் செய்ய வேண்டும். குழந்தைகள் படிக்க முடியாது. வருமானமும் குறைவு.

ஆனால் அரசு கள் இறக்க அனுமதி கொடுத்தால் குடும்பத்தின் வருமானம் உயருவதுடன், எங்கள் குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகும். இதனால்தான் நீதிமன்றத் தீர்ப்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்'' என்றார்.

பனைத் தொழிலாளர் நலனுக்காகப் பாடுபட்டு வரும் தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட தொழிலாளர் நல ஆணையத்தின் செயலர் அருள்தந்தை செல்வ ஜார்ஜ் நம்மிடம் பேசினார். ""கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்ட பிறகு தென் மாவட்டங்களில் மட்டும் சுமார் 1 லட்சம் பனை மரங்கள் அழிந்துவிட்டன.

ஏராளமான பனைத் தொழிலாளர்களும் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். இந்தத் தடை நீங்கினால் அந்தத் தொழிலாளர்கள் மீண்டும் பனைத் தொழிலுக்கு வரும் வாய்ப்பு ஏற்படும். இதனால் தற்போது வறுமையில் தவிக்கும் பனைத் தொழிலாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்றவாவது அரசு கள் இறக்க இருக்கும் தடையை நீக்க வேண்டும்'' என்றார்.

நாடார் சங்கப் பிரமுகர்களின் கருத்தோ இவ்வாறு இருக்க, தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் குமரி அனந்தனோ இதை எதிர்க்கிறார். நாம் அவரிடம் இதுபற்றிப் பேசினோம். ""கள் இறக்க அனுமதி கொடுத்தால் மட்டுமே பனைத் தொழிலாளர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் என்பதை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்.

பிற வழிகளிலும் அவர்களது வாழ்வை மேம்படுத்த முடியும். ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் முதல்வரைச் சந்தித்து வைத்த வேண்டுகோளில், கள்ளால் வரும் நன்மை என்பதில் கள்ளால் என்பதற்குப் பதிலாக பதநீரால், நுங்கால் வரும் நன்மைகள் என்றே இருந்திருக்க வேண்டும். வெளிநாட்டு மதுவும் உடலுக்குத் தீங்கு பயப்பதுதான். அவற்றையும் விரட்ட வேண்டும்.

எனவே ஏற்கெனவே இருக்கும் தீமைக்கு மேல் பெரிய தீமையா, சிறிய தீமையா என்று பார்க்காமல் புதிய தீமையாக இருக்கும் கள் வேண்டவே வேண்டாம். தமிழகத்தில் மூன்று கோடி பனை மரங்கள் ஏறுவதற்கு ஆள் இல்லாமல் பரிதாபமாக நிற்கின்றன.

அவற்றை முறையாகப் பராமரித்து பதநீர், நுங்கு போன்றவற்றை எடுத்தாலே ஆண்டுக்கு ஆறாயிரம் கோடி முதல் ஏழாயிரம் கோடி ரூபாய் வரையில் வருமானம் கிடைக்கும். அதை விட்டுவிட்டு அரசு கள் இறக்க அனுமதி கொடுத்தால் கருப்பட்டி, கற்கண்டு, பதநீர், நுங்கு போன்ற பிற பொருட்கள் அடியோடு அழிந்துவிடும்.

எனவே நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் கள் இறக்க அனுமதிக்கப் போவதில்லை என்று அரசு அறிவிக்க வேண்டுமென்று முதல்வரிடம் கேட்கப் போகிறேன்'' என்றார் ஆவேசமாக.

த. வளவன்

கந்துவட்டியை ஒழிக்க வேண்டுமானால்....

வங்கிகள் கடன் தந்தால் மட்டுமே கந்து வட்டியை ஒழிக்க முடியும்! மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்




காரைக்குடி அருகே உள்ள கண்டனூரில், இந்தியன் வங்கி சார்பில் இந்திரா கிராமப்புற வீட்டுக் கடன் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா வில் கலந்து கொண்டு பேசும் போது அவர் கூறியதாவது:

அனைவருக்கும் தேவைக்கு ஏற்ப கடன் கிடைக்கவேண்டும் என்பதற்காக, பல்வேறு தொழில் செய்வதற்காக கடன் வழங்கும் முறைகள் எளிமை யாக்கப்பட்டு உள்ளன. கடன் தருவதுதான் வங்கிகளின் கடமை. அதை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்துவது மக்களின் கடமை.

தொழில் செய்பவர்களுக்குக் கடன் கிடைக்கும் போதுதான் உற்பத்தி பெருகும். அதன் மூலம் வேலை வாய்ப்பும் கிடைக்கும். தங்க நகைத் தொழி லாளர்களுக்கு இப்போது கடன் வழங்கும் திட்டம் மிக வும் சிறப்பாகச் செயல்படுத் தப்பட்டு வருகிறது.

கோதுமை, பருப்பு இறக்கு மதி செய்வது குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சர்ச்சையைக் கிளப்புகின்றன. ஆனால் ஆயிரம் டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு யாரும் எந்த எதிர்ப்பும் காட்டுவதில்லை. அந்த அளவுக்கு தங்கம் முக்கியத்துவம் வாய்ந்தாகக் கருதப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் சுய தொழில் செய்பவர்கள் 48 சத விகிதம் பேர், கந்து வட்டிக்குக் கடன் வாங்கிதான் தொழில் செய்தனர். கந்து வட்டியை ஒழிக்க வேண்டுமானால் வங்கி கள் கடன் கொடுத்தால் தான் முடியும். எனவே, எல்லா துறையினருக்கும் வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது.

2006-2007 இல் விவசாயக் கடனாக ரூ.2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. கல்விக் கடனாக ரூ.13,424 கோடி வழங் கப்பட்டு உள்ளது. முன்பை விட இப்போது 4 மடங்கு கூடு தலாகக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. உற்பத்தி சதவிகிதம் 12 முதல் 13 வரை அதிகரித்து இருப்பதற்கு வங்கிகள் கடன் வழங்கியதுதான் காரணம்.

- இவ்வாறு சிதம்பரம் பேசினார்.


கடன் கொடுத்தால்...வாங்குவார் இல்லை!

மாற்றுப்பயிர் சாகுபடிக்கு அதிக அளவில் வங்கிக்கடன் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.ஆனால் தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மாற்றுப்பயில் சாகுப்படியில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. யாருக்காவது ஆர்வம் இருந்தால் என்னை அணுகலாம்.

-இப்படி அழைப்பு விடுப்பவர் "நாபார்ட்" வங்கியின் உதவிப்பொது மேளாளர் திரு.பாஸ்கரன்.

அன்மையில் தஞ்சையில் நடைபெற்ற மாற்றுப்பயிர் சாகுபடி குறித்த கருத்தரங்கில் பேசும் போதுதான் இத்தகைய தகவலை தெரிவித்தார்.இதே கருத்தரங்கில் பேசிய பி.எம்.டி வேளான் அறிவியல் மையத்தினை சேர்ந்த தமிழ் செல்வி மாற்றுப்பயிர் சாகுபடி குறித்தான பயிற்சியினை தங்கள் நிறுவனம் வழங்குவதாக கூறினார்.

வேளான் உதவி இயக்குனர் திரு.லோகநாதன் தனது பேச்சில்,"விழிப்பு உணர்வு ஊட்டினால் மட்டும் போதுமா...மாற்றுப்பயிர்களான மக்காச்சோளம், சூரியகாந்தி,எண்ணண பனை போன்றவற்றின் விதைகளுக்கு எங்கே போவது? என விவசாயிகளுக்கு சந்தேகம் எழும்.விதைகளையும் உரங்களையும் இலவசமாக கொடுக்க நாங்கள் தயார்.ஆனால் விவசாயிகள் ஆர்வம் காட்டினால்தான் எங்களுக்கு இது தொடர்பாக பேச ஆர்வம் ஏற்படும். அப்போதுதான் இன்னும் அதிக அளவில் விவசாயிகளுக்கு உதவ முடியும்" என ஆதங்கப்பட்டார்.

தொடர்புக்கு :4362221474

தரவு - பசுமை விகடன்