மியூச்சுவல் பண்ட் முதலீடு இனி குறையுமா?

வரும் ஜூலை 1ம் தேதி முதல், மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு, நிரந்தர கணக்கு எண் (PAN) குறிப்பிட வேண்டும். இதனால் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் பொது மக்கள் முதலீடு செய்வது பாதிக்கப்படலாம் என மியூச்சுவல் பண்ட் கம்பெனிகள் கலக்கம் அடைந்துள்ளன.

மியூச்சுவல் பண்ட் முதலீடு இந்தியாவில் சமீப காலமாகத்தான் அதிகம் பேருக்கு தெரியத் தொடங்கியுள்ளது. இத்திட்டங்களில் இந்தியர்கள் ரூ.4,10,000 கோடி முதலீடு செய்துள்ளனர்.
எனினும் இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் குவிந்துள்ள பணத்தை விட, அமெரிக்காவில் 100 மடங்கு அதிக பணம் புரள்கிறது.இந்நிலையில் சிறிய முதலீடுகளுக்கும் கூட PAN குறிப்பிடுவது கட்டாயம் என்று அறிவித்தால், அது பாதிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பாக சிறிய நகரங்கள், கிராமப்புறங்களில் பாதிப்பு அதிகமாக இருக்குமாம். காரணம், அங்கு PAN எண் பற்றி போதிய விழிப்புணர்வு கிடையாது. நிறைய பேரிடம் PAN இருக்காது என்பதுதான்.இதுவரை இவற்றில் ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக முதலீடு செய்தால்தான், வருமான வரித் துறை தரும் நிரந்தர கணக்கு எண்ணை (PAN) குறிப்பிட வேண்டும் என விதி இருந்தது.

ஆனால் ஜூலை 1 முதல் இது மாறுகிறது. இனி, வெறும் 50 ரூபாய் முதலீடு செய்தால் கூட, PAN எண்ணை குறிப்பிட வேண்டியது கட்டாயமாகிறது. இதனால் மக்களின் முதலீடு குறையலாம் என கம்பெனிகள் கலக்கம் அடைந்துள்ளன.“பங்குச் சந்தையில் எல்லா பரிவர்த்தனைகளுக்கும் PAN கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. தற்போது அது மியூச்சுவல் பண்ட் திட்டத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது” என இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கத் தலைவர் ஏ.பி. குரியன் தெரிவித்தார்.

இப்போது மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் பணத்தில் சுமார் 30 சதவீதம் சிறு நகர மக்கள் முதலீடு செய்ததுதான். தொடர்ந்து, இந்த தொகை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் முறைக்கு (‘SIP’) நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

0 comments: