வேளாண்மையும் பெருந்தொழிலாக வேண்டும்

-என். விட்டல்
(கட்டுரையாளர்: முன்னாள் ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு ஆணையர்.)

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான ""ரிலையன்ஸ்'', தகவல் தொடர்புத் துறையில் ஜாம்பவானாக உருவெடுத்துவரும் சுநீல் மித்தலின் "ஏர்-டெல்' போன்ற நிறுவனங்கள் இப்போது வேளாண்மைத் துறையில் பெரும் அக்கறை எடுத்துவருகின்றன.

மிகப் பிரம்மாண்டமான அளவில் உற்பத்தி, விநியோகம், விற்பனை என்ற தங்களுடைய தொழில்துறை வெற்றி உத்தியை, வேளாண்மைத்துறையிலும் புகுத்த முயல்கின்றன.

"மனிதர்கள் காலில் போட்டுக்கொள்ளும் செருப்புகளும் பூட்ஸ்களும் ஏர்-கண்டிஷன் செய்யப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன; வேளாண்துறையில் விளையும் தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவை மண்டிகளிலும், வெயிலும் தூசும் நிரம்பிய சந்தைகளிலும், வீதிகளிலும் கோணியைப் பரப்பி விற்கப்படுகின்றன' என்று ஆமதாபாதில் இந்திய நிர்வாகவியல் மாணவர்களிடையே உரை நிகழ்த்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கவலையோடு குறிப்பிட்டிருந்தார்.

மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மூலம், பெருநகரங்களில் உள்ள அங்காடி வளாகங்களில் வேளாண் விளைபொருள்கள் நன்கு சுத்தம் செய்யப்பட்டு, ""பேக்'' செய்யப்பட்டு, எடை, தரம், விலை குறியீடுகளுடன் விற்கப்படுமானால் லாலு சுட்டிக்காட்டிய முரண்பாடு மறைந்துவிடும். இது மட்டும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவேறினால், இந்திய வேளாண்மைத்துறையில் ""மூன்றாவது புரட்சி'' ஏற்பட்டுவிடும்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது கைக்கும் வாய்க்கும் எட்டுகிற நிலைமையில்தான் நமது உணவு தானிய உற்பத்தி இருந்தது. உணவு தானியத் தேவையில் தன்னிறைவு பெற்றவர்களாகக் கூட இல்லை. 1970-களில் அறிமுகப்படுத்தப்பட்ட ""பசுமைப் புரட்சி''யின் விளைவாக நிலைமை தலைகீழாக மாறியது. அதில் பங்கேற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் போன்றவர்கள் ""இரண்டாவது பசுமைப் புரட்சி'' இப்போது அவசியம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

வறுமைக் கோட்டுக்குக்கீழே வாழும் ஏழைகளுக்காக இப்போது மீண்டும் கோதுமை, அரிசி போன்றவற்றை இறக்குமதி செய்யும் நிலையில் இருக்கிறோம்.

கிராமப்புறங்களில் ஏற்பட்ட இரண்டாவது புரட்சி, பால் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக நம்மை இடம் பெறச் செய்த ""வெண்மைப் புரட்சி''யாகும். அமுல் நிறுவனத்தின் தந்தையும் தலைசிறந்த நிர்வாகியுமான டாக்டர் வர்கீஸ் குரியனும், சிறந்த காந்தியவாதியும் கைதேர்ந்த கூட்டுறவு இயக்க நிபுணருமான டாக்டர் திரிபுவன்தாஸ் படேலும் இந்தப்புரட்சிக்கு முழுமுதல் காரணகர்த்தாக்கள். குஜராத்தில் மட்டும் எல்லா மாநிலங்களிலுமே பால் பண்ணைகள் பெருக இவர்களின் நடவடிக்கைகள் முன்னோடியாகத் திகழ்ந்தன.

பசுமைப்புரட்சி காலத்தில் உரிய நேரத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற இடுபொருள்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்தது. பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. வீரிய விதைகள் விநியோகிக்கப்பட்டன.

விவசாயிகள் சாகுபடி செய்யும் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது, சந்தையில் அந்த விலைக்குக் குறைவாக விற்கும் நிலைமை ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு நேரடி நெல் கொள்முதல் திட்டத்தை இந்திய உணவு கார்ப்பரேஷன் மூலம் அமல்படுத்தியது, நெல், கோதுமை, சர்க்கரை போன்றவற்றை போதிய அளவில் கையிருப்பில் வைத்துக் கொள்ள கிடங்கு வசதிகளும், அவற்றுக்கு ரயில் பாதை இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.

இப்போது இந்திய வேளாண்மை பற்றிப் பேசினாலே முதலில் நினைவுக்கு வருவது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதுதான். பருத்தி சாகுபடியில் இறங்கியவர்களும், அதிக பொருள் செலவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி வயலுக்கு அடித்தவர்களும்தான் அதிகம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதைத் தடுக்க, முதலில் விவசாயிகளை அழைத்து அவர்களின் மனத்தளர்ச்சி, விரக்தி மனப்பான்மை நீங்க, நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேச வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து மிகுந்த நம்பிக்கையோடு இறக்குமதி செய்யப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளும், அதிக விலைக்கு வாங்கப்பட்ட பூச்சிக் கொல்லிகளும் பலன் தராமல் பருவமழை பொய்த்ததால் கடன் சுமை அதிகரித்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். அப்படி இறக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு தலா ஒரு லட்ச ரூபாயை உதவித்தொகையாகத் தருகிறது.

வறுமை தாளாமல் விவசாயக் கூலிகள் தவிக்கும்போது அவர்களுக்கு அரசின் உதவி உரிய முறையில் கிடைக்காமல் போவதால், நக்சல்களின் நெருப்புப் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு நக்சல்களாக மாறுகின்றனர்.

தற்கொலைக்கு அடுத்தபடியாக இந்திய வேளாண்மையை மிகவும் பாதிக்கும் அம்சம் உற்பத்தித் திறன் ஆகும். நம்மைவிடக் குறைந்த சாகுபடி பரப்பைக் கொண்டுள்ள சீனா, நம்மைவிட அதிக அளவு தானிய விளைச்சலைத் தருகிறது.

நிலத்திலிருந்து விளைவது குறைவாக இருப்பது ஒருபகுதி என்றால், விளைந்த தானியங்களையும் காய்கறிகளையும் பழங்களையும் அறுவடை செய்து எடுத்து வரும்போது சேதாரப்படுத்துவதன் மூலம் 10 சதவீத உற்பத்தியை வீணாக்குகிறோம்.

எல்லா பருவகாலத்திலும் பூச்சி அரிக்காமல், பறவைகள், எலிகள் பாழ்படுத்தாமல் தானியங்களையும் இதர விளைபொருள்களையும் சேமித்து வைக்க கலன்கள், குதிர்கள், கிடங்குகள், குளிர்பதன வசதி இல்லாமல் 40 சதவீதம் வரை வேளாண் சாகுபடி வீணாகிறது.

ஓராண்டு சாகுபடி பற்றாக்குறையாக இருப்பதும் அடுத்த ஆண்டு உபரியாவதும் தொடர்கிறது. பற்றாக்குறையின்போது பணமே கிடைக்காமல் ஏழ்மையில் மூழ்க நேரிடுகிறது என்றால், உபரியின்போது கொள்முதல் விலை சரிந்து, போட்ட அசலைக்கூட எடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 60 சதவீத பங்கைப் பிடிக்கின்றனர்.

இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தில் நேரடியாக ஈடுபட்டு, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீத அளவுக்கு மட்டுமே சாகுபடி செய்கின்றனர்.

இந் நிலையில் பெரிய தொழில்நிறுவனங்கள் இத் தொழிலில் ஈடுபட்டால் நிலங்களை வளப்படுத்துவது, பாசன வசதி அளிப்பது ஆகியவை விரிவான அளவில் நடைபெறும். அடுத்து தரமான விதைகள், விலைகுறைந்த இயற்கை உரங்கள், நவீன சாகுபடி உத்தி ஆகியவற்றைப் பின்பற்ற முடியும்.

திசு வளர்ப்பு மூலம் செடிகளையும் கொடிகளையும் வளர்ப்பது, ஒட்டுச் செடிகளைப் பயன்படுத்துவது என்று வேளாண்மையில் லாப நோக்குடன் புதியவை புகுத்தப்படும். அடுத்தபடியாக விளைபொருள்களைச் சேதம் இன்றி அறுவடை செய்வதும் கிடங்குகளுக்கும் விற்பனை நிலையங்களுக்கும் கொண்டு செல்வது சாத்தியம்.

இடைத்தரகர் இன்றி, உற்பத்தியாளருக்கும் கணிசமான தொகை கிடைக்கும் நுகர்வோருக்கும் கட்டுப்படியாகும் விலையில் பண்டங்கள் கிடைக்கும். கூட்டுறவுத்துறை வலுப்பெறும். உற்பத்தி, விநியோகம், விற்பனை போன்றவை விவசாயிகளுக்குச் சாதகமாக மாறும்.

அதன் பிறகு தொழில் நிறுவனங்களின் தலையீட்டால் ஏற்படும் மூன்றாவது வேளாண்மைப் புரட்சியானது ""விவசாயியைச் சார்ந்த வேளாண்மை'' என்ற நிலைமையை மாற்றி, ""வேளாண்-வர்த்தகம் சார்ந்த வேளாண் தொழில்'' என்ற நிலைமைக்குக் கொண்டு செல்லும்.

2 comments:

said...

அருமையான தொகுப்பு இது மட்டும் நடந்து விட்டால் இந்திய நாடுபோல் ஒரு நாடு உலகில் இல்லை என்ற நிலை வரும்


--
நினா.கண்ணன்

said...

ஓராண்டு சாகுபடி பற்றாக்குறையாக இருப்பதும் அடுத்த ஆண்டு உபரியாவதும் தொடர்கிறது. பற்றாக்குறையின்போது பணமே கிடைக்காமல் ஏழ்மையில் மூழ்க நேரிடுகிறது என்றால், உபரியின்போது கொள்முதல் விலை சரிந்து, போட்ட அசலைக்கூட எடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்படுகிறது.
இது தாங்க உண்மை நிலை .. தாங்கள் கூறிய படி நடக்க வேண்டும் . காத்திருப்போம் .
வலைச்சரத்தில் மதுமதியின் அறிமுகம் பார்த்து தங்கள் பதிவினை காண்கிறேன் .