அஞ்சல் துறை சொந்தமாக வங்கி துவங்க திட்டம்

வங்கிகளில் வட்டிவிகிதம் அதிகரித்து வருவதை தொடர்ந்து அஞ்சலக சேமிப்பு கணக்குகள் வங்கிகள் பக்கம் திரும்புவதை தவிர்க்க சொந்தமாக வங்கி தொடங்க அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரி இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நிதிஅமைச்சகத்தை அணுகியுள்ளது.

பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், மாதந்தோறும் வருவாயும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வங்கி அல்லது அஞ்சலகங்களில் மாதாந்திர வருவாய் திட்டத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டுக்கு முன்னர் வரை வங்கிகளில் வட்டிவிகிதம் மிகவும் குறைந்து காணப்பட்ட நிலையில் அஞ்சலக சேமிப்பு கணக்கில் நிறைய பேர் பணம் போட ஆரம்பித்தனர். அஞ்சலகங்களில் கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கை எல்லா வங்கிகளிலும் கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகம் ஆகும்.

இந்தக் கணக்கில் பணம் போடுபவர்களுக்கு 9 சதவீட்டி வட்டி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. ஒரு சில வங்கிகள் 10 சதவீதம் வரை வட்டி கொடுக்க ஆரம்பித்துள்ளன. இதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்துள்ளது. அஞ்சலக சேமிப்பு திட்டத்தின் வட்டியை உயர்த்த நிதி அமைச்சகத்தின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. இதனால் அஞ்சலக சேமிப்பு கணக்குக்கு இருந்த கவர்ச்சி தற்போது குறைந்து விட்டது. அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்திருந்தவர்களும் அதை ரத்து செய்து விட்டு வங்கிகளில் டெபாசிட் செய்ய தொடங்கியுள்ளனர்.

இதை தடுத்து நிறுத்தும் நோக்கில் அஞ்சல் துறையும் தனக்கு சொந்தமாக ஒரு வங்கி தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரி இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. அனுமதி கிடைத்தவுடன் முழுவீச்சில் வங்கி தொடங்குவதற்கான பணிகளில் அஞ்சல் துறை இறங்கும். மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ஷகீல் அகமது இந்த தகவல்களை தெரிவித்தார்.

0 comments: