கண்பார்வை குறைபாட்டிற்கு நவீன சிகிச்சை


இந்தியாவிலேயே முதன் முறையாக கத்தி இன்றி லேசர் மூலம் கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ள "இன்ட்ராலேஸ்' எனும் புதிய கருவியை சென்னை அகர்வால் கண் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன் விலை 2 கோடி ரூபாய் ஆகும். ஒரு கண்ணுக்கு வழக்கமாக கட்டணம் 15 ஆயிரம் ரூபாயுடன் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் இதற்கு கட்டணம் ஆகும் என்று நிர்வாக இயக்குனர் அமர்அகவர்வால் தெரிவித்தார்.

கண் மருத்துவத்தில் பல்வேறு சாதனை களை மேற்கொண்டுள்ள அகர்வால் மருத்துவமனை "இன்ட்ராலேஸ்' எனும் லேசர் கருவியை அறிமுகம் செய்துள்ளது. இக்கருவி மூலம் மேம்பட்ட கண் அறுவை சிகிச்சையை வழங்க முடியும்.

புதிய கருவியை அறிமுகம் செய்து வைத்து அகர்வால் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அமர் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது:

கண் மருத்துவத்தில் ஒரு புதிய மைல்கல்லாக "இன்ட்ராலேஸ்' கருவியை இந்தியாவிலேயே முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளோம்.

பிளேடு இல்லாமல் லேசர் மூலம் அறுக்கப்படும்
கண் பார்வையில் அதிக குறைபாடு இருந்து "சோடா புட்டி' கண்ணாடி போடுபவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பார்வை பெற லேசிக் லேசர் சிகிச்சை உள்ளது. இதற்கு ஒரு கண்ணிற்கு கட்டணம் 15 ஆயிரம் ரூபாய் ஆகும். இதில் முதலில் பிளேடு மூலம் லென்ஸ் மேல்பாகம் அறுக்கப்படும். 2வது அடுக்கில் லேசர் செலுத்தி கண் குறைபாடு நீக்கப்படும். மீண்டும் மேல் பாகம் மூடப்படும். கண்ணில் கட்டு போட வேண்டியதில்லை. ஒரு மணி நேரத்தில் கண்ணாடி இல்லாமல் தெளிவாக பார்க்கலாம்.

கண் அறுவை சிகிச்சையின் போது தற்போது "மைக்ரோகெரடோம்' என்ற பிளேடு பயன்படுத்தப்படுகிறது. இதை மாற்றி கம்ப்யூட்டர் வழியாக லேசர் முறையில் அறுவை சிகிச்சையை இக்கருவி மூலம் மேற்கொள்ள முடியும். கத்தியின்றி ஒரு அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்பது இக்கருவியின் சிறப்பம்சம். இந்த கருவி மூலம் மேற்கொள்ளப்படும் சிகிச்சை மிக துல்லியமானதாகவும், நோயாளிக்கு அதிக பாதுகாப்பையும் வழங்கும்.

நவீன "இன்ட்ராலேஸ்' முறை பயன் படுத்தப்படும் லேசிக் சிகிச்சை வழியாக "ஸ்டாண்டர்டு' மற்றும் "லேசிக்' ஆகிய இரு சிகிச்சை முறைகளிலும் அதிக அளவிலான நோயாளிகள் பார்வை கூர்திறனை பெறுகிறார்கள் என்பது உலக அளவில் நடத்தப் பட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

கண் மாற்று அறுவை சிகிச்சையில் புதுமை

"இன்ட்ராலேஸ்' லேசர் சாதனத்தின் மூலமாக ஒரே நேரத்தில் விழி வெண் படலத்தை (கார்னியா) பல படிமங்களாக வெட்ட முடிவதால் கண் பார்வை யின்மையை ஒழிக்க முடியும். உதாரணமாக, இறந்தவர்களின் கண்களை எடுத்து பார்வை யற்றோருக்கு பொருத்தும் போது நோயாளி யின் விழி வெண்படலத்தின் முன்பகுதி சேதமடைந்திருந்தால் அதை மட்டும் இக்கருவி மூலம் மாற்றி அறுவை சிகிச்சை செய்ய முடியும்.

ஒரே கண்ணை 2 ஆக பிரித்து 2 பேருக்கு பொருத்தலாம்

அதே போல் பின்பகுதி சேதமடைந்திருந்தால் அதை மட்டும் தனியாக வெட்டி நோயாளிக்கு பொருத்தி பார்வையளிக்க முடியும். இதன் மூலம் ஒரு கண்ணைக் கொண்டு இருவிதமான குறைபாடு உள்ள இரு பார்வையாற்றவர்களுக்கு பார்வை அளிக்க முடியும் என்பது இந்த கருவியின் சிறப்பம்சம். இந்த சாதனம் இன்டர்நெட் மூலமாக அமெரிக்காவில் உள்ள நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கிருந்து அறுவை சிகிச்சையை ஆய்வு செய்ய முடியும். அறுவை சிகிச்சையின் போது சிறு குறைபாடுகள் ஏதாவது ஏற்படு மானால் அதை உடனுக்குடன் கண்டுபிடித்து சரிபடுத்த இந்த வசதி உதவியாக இருக்கும். "இன்ட்ராலேஸ்' கருவியின் விலை இரண்டு கோடி ரூபாய்.

இவ்வாறு டாக்டர் அமர் அகர்வால் தெரிவித்தார்.

0 comments: