தமிழகம் வருகிறது 'NIKE' காலணி தொழிற்சாலை


காஞ்சிபுரம் அடுத்த செய்யாறு பகுதியில் ரூ.300 கோடி முதலீட்டில் சர்வதேச பிராண்டான "நைக்" காலணி தொழிற்சாலை அமைகிறது. இதை ஹாங்காங்கைச் சேர்ந்த குரோத் லிங்க் ஓவர்சீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அங்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் உற்பத்தி தொடங்கும். 15,000 பேருக்கு வேலை கிடைக்கும்.

தைவானைச் சேர்ந்த காலணி நிறுவனம் பெங் டாய் என்டர்பிரைஸ். இது உலகப் புகழ்பெற்ற "நைக்" தயாரிப்புகளைத் தயாரித்து சப்ளை செய்கிறது. அதன் துணை நிறுவனமாக ஹாங்காங்கைச் சேர்ந்த குரோத் லிங்க் ஓவர்சீஸ் செயல்படுகிறது. இது தமிழகத்தின் செய்யாறு பகுதியில் அமைய உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தனது காலணி தொழிற்சாலை அமைக்கவுள்ளது.

செய்யாறு சிப்காட் தொழிற் பூங்காவை ஒட்டி சுமார் 275 ஏக்கர் பரப்பில் தொழிற்சாலை அமைப்பதுடன், காலணி தயாரிப்புப் பொருட்களைச் சப்ளை செய்யும் நிறுவனங்களையும் அங்கு கொண்டு வர முயற்சி தொடங்கியுள்ளது. இதற்காக தனது சப்ளை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

எதிர்கால விரிவாக்கத் திட்டங்களுக்காக 225 ஏக்கர் கூடுதல் இடத்தை வாங்குவதற்காக தமிழக அரசுடன் கடந்த செப்டம்பர் மாதத்திலேயே குரோத் லிங் ஓவர்சீஸ் நிறுவனம் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. முழுவதும் ஏற்றுமதிக்கான காலணி தயாரிப்பை செய்யாறு தொழிற்சாலை மேற்கொள்ளும். அங்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் உற்பத்தி தொடங்கும். அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 10 லட்சம் வீதம் காலணி ஜோடிகள் தயாரிக்கப்படும்.

செய்யாறு தொழிற்சாலையில் முதல் 2 ஆண்டுகளில் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும். அடுத்த 3 ஆண்டுகளில் இது 15,000 ஆக உயரும். ஊழியர்களில் 80 சதவீதம் பேர் பெண்களாக இருப்பார்கள் என்று குரோத் லிங்க் ஓவர்சீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், தொழிற்சாலைகள் அதிகம் இல்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கிய செய்யாறு பகுதி வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 comments:

said...

அட.. அப்போ நைக் காலணி விலையும் குறையும் :))

said...

தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்ட செய்யாறு பகுதிகளில் புதிய "நைக்" சப்பாத்து தொழிற்சாலை அமைப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

வேலூர் பறப்பகம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டால் இன்னும் நன்மையாக இருக்கும்.

தமிழக அரசு ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகிவைகளைவிட பறப்பகங்கள் விசயத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது.