இறால் மீன்களை தாக்கும் வெண்புள்ளி நோய் - ஆண்டிற்கு ரூ.500 கோடி நஷ்டம்

"இறால் மீன்களை வெண்புள்ளி நோய் தாக்கு வதால் இந்தியாவில் ஆண்டிற்கு 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது,'' என சென்னையில் நடந்த உவர்நீர் மீன் வளர்ப்பு கருத்தரங்கில் இந்திய மீன்வளர்ப்பு மைய தலைவர் சக்திவேல் பேசினார்.

இறால் வளர்ப்பில் மண் மற்றும் நீரின் முக்கியத்துவம், அவை சார்ந்த அம்சங்கள் குறித்து விவாதிக்கும் வகையில், மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் "உவர்நீர் மீன் வளர்ப்பு அமைவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு' என்னும் தலைப்பில் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடந்தது. கருத்தரங்கை கேரள வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சைலஸ் துவக்கி வைத்தார்.

அமெரிக்க ஆஃபர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சி.இ.பாய்டு, ரௌஸ், இந்திய கடல்மீன் ஆராய்ச்சி கழகத்தின் துணை இயக்குனர் திவான் ஆகியோர் பேசினர். கருத்தரங்கில் இந்திய மீன் வளர்ப்பு மைய தலைவர் சக்திவேல் பேசியதாவது: பசுமைப்புரட்சிக்கு விளைநிலங்களின் புரிந்துணர்வு எப்படி காரணமாக அமைந்ததோ, அதுபோல் நீலப்புரட்சிக்கு இறால் மீன் வளர்ப்பு காரணமாகி வருகிறது. இந்தியாவில் 1.4 லட்சம் ஹெக்டேர் பரப்பில் இறால் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இறால் வளர்ப்பில் மண் மற்றும் நீரின் மேம்பாடு மிகவும் முக்கியம். இறால் மீன்களை வெண்புள்ளி நோய் தாக்குவதால் இந்தியாவில் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் வெண்புள்ளி நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. செயற்கை முறையில் மீன்வளத்தை பெருக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை அருகே முட்டுகாட்டில் இரண்டு கோடி ரூபாய் செலவில் கொடுவா மீன் வளர்ப்பு நிலையம் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடல் விஞ்ஞானிகள், மீனவர்கள், விவசாயிகள் ஆகியோர் மத்தியில் இன்று வரை நல்லுறவு இல்லை. கடல்சார் விஞ்ஞானிகள் நீலப்புரட்சிக்கான தங்கள் ஆராய்ச்சிகளோடு, தொழில்நுட்பங்களையும் எடுத்து கொண்டு மீனவர்களை நாடிச்செல்ல வேண்டும். மீனவர் கிராமங்களில் தொழில்நுட்ப சேவை மையம், உவர்நீர் மீன் வளர்ப்பு சேவை மையங்கள் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். கடலோரங்களில் சுத்தம் இல்லாத நிலையை அகற்றி, மீனவர்கள் தங்கள் பொருட்களை நல்ல முறையில் பேக்கிங் செய்து, நுகர்வோருக்கு வழங்கும் வகையில் வசதிகள் செய்யப்பட வேண்டும்.இவ்வாறு சக்திவேல் பேசினார். கருத்தரங்கு ஏற்பாடுகளை மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலைய இயக்குனர் பொன்னையா தலைமையில் மைய ஆராய்ச்சியாளர்கள் செய்திருந்தனர்.

0 comments: