தமிழகத்தில் மீண்டும் கள்?

கள் இறக்க அனுமதிப்பது குறித்து அரசு சாதகமாக பரிசீலிக்கலாம்' என்று கருத்து தெரிவித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இதைத் தொடர்ந்து, "அரசு மீண்டும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும்' என்ற தமது நீண்ட நாள் கோரிக்கையை மீண்டும் உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன நாடார் சங்கங்கள்.

ஆனால் இதை அரசு அனுமதிக்கக்கூடாது என்று தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரிய தலைவர் குமரி ஆனந்தன் அறிவித்திருப்பதால் பரபரப்பில் இருக்கின்றனர் பனைத் தொழிலாளர்கள் மற்றும் நாடார் சங்கங்கள். தமிழகத்தில் தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க, தமிழக அரசு கடந்த இருபது வருடங்களுக்கு முன்பே தடைவிதித்தது.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கள் இறக்கும் தொழில் செய்து வந்த பனைத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். எனவே "உடலுக்குக் கேடு விளைவிக்காத, மருத்துவக் குணம் கொண்ட தனிப் பதனீர் எனும் கள்ளை தென்னை மற்றும் பனை மரங்களிலிருந்து இறக்கி விற்க அரசு அனுமதி தர வேண்டும்' என்று நீண்ட நாட்களாகவே அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர் பனைத் தொழிலாளர்கள். நாடார் சங்கங்களும் போராட்டங்களில் ஈடுபட்டன.

சமீபத்தில்கூட இதற்காகவே தூத்துக்குடி வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்! தி.மு.க. உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும், "கள் இறக்கும் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிப்போம்' என்று தங்களது தேர்தல் அறிக்கைகளில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு புறமிருக்க, விருதுநகரைச் சேர்ந்த நாடார் பேரவை பிரமுகர் ராமவேலு என்பவர், கள் இறக்கி விற்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் தர்மராவ் மற்றும் பழனிவேலு ஆகியோர் முன்னிலையில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த விசாரணையின் போது, ""விஸ்கி, பிராந்தி போன்ற மது வகைகளை விற்கும் அரசு, கள்ளுக்கு மட்டும் தடைவிதிப்பது ஏன்?'' என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ""இந்தக் கோரிக்கை குறித்து அரசு சாதகமாகப் பரிசீலிக்கலாமே'' என்று கருத்து தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், ""அரசு இதை கனிவோடு பரிசீலித்து வருகிறது'' என்று சொன்ன பின்னர் மீண்டும் இந்தப் பொதுநல வழக்கு கடந்த 25ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.

இப்போது இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு ஒரு வார அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், "கள் இறக்க அனுமதி தர வேண்டும்' என்பதை வலியுறுத்திப் போராடி வரும் பல்வேறு நாடார் அமைப்பு தலைவர்களிடம் பேசினோம். நாடார் பேரவை தலைவர் எர்ணாவூர் நாராயணன் நம்மிடம், ""கடந்த 20 வருடங்களில் அடுத்தடுத்து வந்த அரசுகள் பனைத் தொழிலாளர்களின் நலனைப் புறக்கணித்துவிட்டன.

இது ஒரு பெரிய கம்யூனிட்டியின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினை. தற்போது கள் இறக்க அனுமதி அளிப்பது குறித்து சாதகமாகப் பரிசீலிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பதால் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு நீக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. எங்களது இயக்கத்தில் பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இருப்பதால் இந்தப் பிரச்சினையை அரசியல் கலப்பு இல்லாமல்தான் கொண்டு செல்கிறோம்.

மது என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. டாஸ்மாக்கில் அதிக விலையுள்ள விஸ்கி மற்றும் பிராண்டியை விற்கும் தமிழக அரசு, உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்காத கள்ளை மட்டும் தடை செய்வது ஏன்? ஆகவே நாங்கள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குக் காத்திருக்கிறோம். அரசு கள் இறக்க இருக்கும் தடையை நீக்கினால் தமிழகத்தில் 30 லட்சம் பனைத் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்'' என்றார்.

இதையே வேறு விதமாகச் சொல்கிறார் நாடார் பேரவையின் பொருளாளரும், சரத்குமார் ரசிகர்மன்ற மாநிலச் செயலாளருமான கரு.நாகராஜன். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அரசு கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று வழக்குப் போட்ட நாடார் பேரவையைச் சேர்ந்த ஆர்.ராமவேலு தற்போது உயிருடன் இல்லை என்பதால் இவர்தான் தற்போது வழக்கை நடத்தி வருகிறார்.

அவர் நம்மிடம், ""எங்களது முக்கிய கோரிக்கை பனைத் தொழிலாளர்களிடமிருந்து கள்ளை அரசே கொள்முதல் செய்து பதப்படுத்தி விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான்! எனவேதான் நீதிமன்றத் தீர்ப்புக்குக் காத்திருக்கிறோம்'' என்கிறார்.
தமிழ்நாடு நாடார் இளைஞர் பேரவையைச் சேர்ந்த கரிக்கோல்ராஜ், ""அரசே கள்ளுக்கடையைத் திறந்து நடத்த வேண்டும்.

அப்படியில்லையென்றால் குறைந்த பட்சம் பனைத் தொழிலாளர்கள் கள்ளை இறக்கி விற்றுக் கொள்ளவாவது அரசு அனுமதிக்க வேண்டும். அதோடு இளநீரைப் பதப்படுத்தி பாக்கெட்டுகளில் விற்பது போன்று பதநீரையும் பதப்படுத்தி அரசு விற்கலாம்.

இதை எல்லாம் செய்யாமல் எங்களது நலன் குறித்து அக்கறையோடு இருப்பதாக நாடகமாடுகிறது அரசு. நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகாவது அரசு நல்ல ஒரு முடிவு எடுக்க வேண்டும்'' என்று ஆவேசப்பட்டார் கரிக்கோல்ராஜ்.

பனைத் தொழிலாளர்கள் நல சங்கத்தின் பொதுச் செயலர் ராயப்பன், ""பனையில் இருந்து கிடைக்கும் பதநீரைக் காய்ச்சி கருப்பட்டி தயாரித்துதான் பனைத் தொழிலாளி பிழைக்க வேண்டுமென்றால் பனைத் தொழிலாளியின் குடும்பமே தொழில் செய்ய வேண்டும். குழந்தைகள் படிக்க முடியாது. வருமானமும் குறைவு.

ஆனால் அரசு கள் இறக்க அனுமதி கொடுத்தால் குடும்பத்தின் வருமானம் உயருவதுடன், எங்கள் குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகும். இதனால்தான் நீதிமன்றத் தீர்ப்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்'' என்றார்.

பனைத் தொழிலாளர் நலனுக்காகப் பாடுபட்டு வரும் தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட தொழிலாளர் நல ஆணையத்தின் செயலர் அருள்தந்தை செல்வ ஜார்ஜ் நம்மிடம் பேசினார். ""கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்ட பிறகு தென் மாவட்டங்களில் மட்டும் சுமார் 1 லட்சம் பனை மரங்கள் அழிந்துவிட்டன.

ஏராளமான பனைத் தொழிலாளர்களும் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். இந்தத் தடை நீங்கினால் அந்தத் தொழிலாளர்கள் மீண்டும் பனைத் தொழிலுக்கு வரும் வாய்ப்பு ஏற்படும். இதனால் தற்போது வறுமையில் தவிக்கும் பனைத் தொழிலாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்றவாவது அரசு கள் இறக்க இருக்கும் தடையை நீக்க வேண்டும்'' என்றார்.

நாடார் சங்கப் பிரமுகர்களின் கருத்தோ இவ்வாறு இருக்க, தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் குமரி அனந்தனோ இதை எதிர்க்கிறார். நாம் அவரிடம் இதுபற்றிப் பேசினோம். ""கள் இறக்க அனுமதி கொடுத்தால் மட்டுமே பனைத் தொழிலாளர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் என்பதை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்.

பிற வழிகளிலும் அவர்களது வாழ்வை மேம்படுத்த முடியும். ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் முதல்வரைச் சந்தித்து வைத்த வேண்டுகோளில், கள்ளால் வரும் நன்மை என்பதில் கள்ளால் என்பதற்குப் பதிலாக பதநீரால், நுங்கால் வரும் நன்மைகள் என்றே இருந்திருக்க வேண்டும். வெளிநாட்டு மதுவும் உடலுக்குத் தீங்கு பயப்பதுதான். அவற்றையும் விரட்ட வேண்டும்.

எனவே ஏற்கெனவே இருக்கும் தீமைக்கு மேல் பெரிய தீமையா, சிறிய தீமையா என்று பார்க்காமல் புதிய தீமையாக இருக்கும் கள் வேண்டவே வேண்டாம். தமிழகத்தில் மூன்று கோடி பனை மரங்கள் ஏறுவதற்கு ஆள் இல்லாமல் பரிதாபமாக நிற்கின்றன.

அவற்றை முறையாகப் பராமரித்து பதநீர், நுங்கு போன்றவற்றை எடுத்தாலே ஆண்டுக்கு ஆறாயிரம் கோடி முதல் ஏழாயிரம் கோடி ரூபாய் வரையில் வருமானம் கிடைக்கும். அதை விட்டுவிட்டு அரசு கள் இறக்க அனுமதி கொடுத்தால் கருப்பட்டி, கற்கண்டு, பதநீர், நுங்கு போன்ற பிற பொருட்கள் அடியோடு அழிந்துவிடும்.

எனவே நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் கள் இறக்க அனுமதிக்கப் போவதில்லை என்று அரசு அறிவிக்க வேண்டுமென்று முதல்வரிடம் கேட்கப் போகிறேன்'' என்றார் ஆவேசமாக.

த. வளவன்

0 comments: