பங்குச் சந்தை... அதிருதுல்ல...!

-சேதுராமன் சாத்தப்பன்

இறங்குமா... இறங்கிடுச்சுன்னா... என்ற பதைபதைப்புடன் ஒவ்வொரு நாளும் பங்குச் சந்தையை உற்று நோக்கும் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் தான் அதிகம். இது பயமா அல்லது எச்சரிக்கையுடன் அணுகுகிறார்களா என்பது புரியாத புதிர். பங்குச்சந்தை சரிந்து கொண்டே இருந்தால், எப்போத்தான் ஏறுமோ என அங்கலாய்ப்பதும். ஏறிக் கொண்டே இருந்தால், பாரு சட்டுன்னு ஒரு நாளைக்கு அடிவாங்கத்தான் இப்படி ஏறிக்கொண்டு இருக்கும் என பலரும் புலம்புவதை கேட்க முடியும்.

இந்த மாதிரி புலம்புபவர்கள் எல்லாருமே பங்குச் சந்தையில் பணத்தை விட்டவர்களாகத்தான் இருப்பார்கள். இவர்கள் அனைவருமே பங்குச் சந்தையை பணம் காய்க்கும் மரம் என நினைத்து வந்து ஏமாந்தவர்களாக இருப்பார்கள். உலக நாடுகளில் பங்குச் சந்தைகள் நன்றாக இருப்பதும், நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் நன்றாக இருப்பதால் பங்குச் சந்தை தொடர்ந்து ஏறிக்கொண்டு இருக்கிறது. இதுதான் உண்மை. பங்குச் சந்தையை நீண்ட கால முதலீடாக பார்ப்பவர்களுக்கு இது அமுதசுரபி என்றால் அது மிகையில்லை.

இதுவரை பங்குச் சந்தையில் ஈடுபடாதவர்கள் நாமும் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா என்று பலரும் நினைக்கும் அளவுக்கு பங்குச் சந்தை உச்சத்தில் போய் நிற்கிறது. வாரம் ஒரு புதிய உச்சத்தை எட்டுகிறது. இந்த வாரம் மும்பை பங்குச் சந்தை 15,565 புள்ளிகளுடன் முடிவடைந்தது. இது ஒரு புதிய அளவாகும். பதினைந்து வருடங்களுக்கு முன், பங்குச் சந்தை பங்கு நிலவரங்களை உடனடியாக தெரிந்து கொள்ள 'ஸ்டாக் எக்சேஞ்சு'க்கு சென்றால் தான் தெரிந்து கொள்ள முடியும். ஆதலால், ஆர்வமுள்ளவர்கள் பங்குச் சந்தைகளுக்கு முன் கூடி நிற்பர். தற்போது நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், வீட்டில் இருந்தபடியே நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம்; வர்த்தகத்தில் ஈடுபடலாம் என்ற நிலை வந்தவுடன் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். குஜராத் போன்ற மாநிலங்களில் காய்கறி விற்பவர்களில் இருந்து பால்காரர் வரை பங்குச் சந்தை நிலவரம் பேசும் அளவுக்கு முன்னேறியுள்ளனர். மும்பை பங்குச் சந்தை தன்னுடைய நடவடிக்கைகளை, நிலவரங்களை தற்போது குஜராத்தி மொழியிலும் வெளியிட ஆரம்பித்துள்ளது.

இந்த வார முக்கிய நிகழ்வாக டி.சி.எஸ்., கம்பெனியின் முடிவுகளை சொல்லலாம். சென்ற வாரம் வெளிவந்த இன்போசிஸ் கம்பெனியின் முடிவுகளை வைத்து பார்த்தபோது டி.சி.எஸ்., கம்பெனியின் முடிவுகள் எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருக்கும் என பலர் அபிப்பிராயம் தெரிவித்து இருந்தனர்.

ஆனால், அந்த கம்பெனியின் முடிவுகள் எதிர்பார்த்ததற்கு எதிராக நன்றாக இருந்ததால், பங்குச் சந்தையை தூக்கிச் சென்றது. தொடர்ந்து வந்த சில கம்பெனிகளின் (எல் அண்டு டி ரான்பாக்கி மற்றும் டி.எல்.எப்.,) முடிவுகளும் அதுபோலவே இருந்ததால் வாரம் முழுவதும் பங்குச் சந்தை களை கட்டியிருந்தது.

திங்களன்று துவக்கமே சிறிது ஏற்றத்துடன தான் ஆரம்பித்தது. முடிவாக 32 புள்ளிகள் மேலே சென்றது. கன்ஸ்ட்ரக்ஷன் பங்குகள் மேலே சென்றன. திங்களன்று மாலை வெளிவரும் டி.சி.எஸ்., கம்பெனியின் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற பயமும் சந்தையில் சிறிது தெரிந்தது.

மூன்று தினங்களாக மேலேயே சென்று கொண்டிருந்த பங்குச் சந்தை, செவ்வாயன்று சந்தை ஒரு குறைந்த மூடிலேயே இருந்தது. அன்றைய தினம் மேலும், கீழுமாக சென்று கொண்டிருந்த சந்தை முடிவாக 21 புள்ளிகள் சரிந்தது. நல்ல ரிசல்ட்டால் டி.சி.எஸ்., கம்பெனியின் பங்குகள் மேலே சென்றது.

செவ்வாய்க்கிழமை போலத் தான் இருந்தது புதன் கிழமையும். ஒரு 'டல்'லான நாளில் 11 புள்ளிகள் மட்டுமே மேலே சென்றது.

ரான்பாக்சி மற்றும் எல்.டி., கம்பெனிகளின் அருமையான காலாண்டு முடிவுகள் ரிலையன்ஸ் கம்பெனிக்கு சாதகமாக கிடைத்த காஸ் விலை சம்பந்தப்பட்ட கோர்ட் தீர்ப்பு ஆகியவை பங்குச் சந்தையை வியாழனன்று தூக்கிச் சென்றது. முடிவில் 248 புள்ளிகள் அதிகமானது. 67 பங்குகள் புதிய அளவை எட்டின.

வெள்ளியன்று, வியாழனின் மூடிலேயே பங்குச் சந்தை துவங்கியது. ஏறுவதும், இறங்குவதுமாக இருந்த பங்குச் சந்தை முடிவாக 15 புள்ளிகள் அதிகமாகி முடிவடைந்தது. வெள்ளியன்று இறுதியில் மும்பை பங்குச் சந்தை 15,565 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 4,566 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. இது ஒரு சாதனை அளவாகும். சாதனைகள் ஏற்படுத்தப்படுவதே முறியடிப்பதற்காக தானே. மக்களிடம் அபரிமிதமாக புழங்கும் பணம், அவர்களின் மூடு ஆகியவை பங்குச் சந்தையை மேலே கொண்டு செல்லலாம். அடுத்த வாரம் பல புதிய வெளியீடுகள் வருகிறது. குறிப்பாக மத்திய அரசாங்கத்தின் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் புதிய வெளியீடு வருகிறது. இது ஒரு பெரிய வெளியீடு ஆகும். ஆதலால் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். மார்க்கெட்டில் தற்போது இந்த வெளியீட்டுக்கு 30 முதல் 36 வரை பிரிமீயம் கிடைப்பதாக செய்திகள் வெளிவருகின்றது. முதலீடு செய்யலாம். சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த 'எவரான்' என்ற நிறுவனம் புதிய வெளியீடைக் கொண்டு வந்தது. அந்த வெளியீடு 125 தடவைக்கு மேல் உடன்பாடு செய்யப்பட்டு ஒரு சாதனை படைத்தது.

'ஸ்பைஸ் டெலிகாம்' புதிய வெளியீடு இந்த வாரம் மும்பை பங்குச் சந்தையில் பட்டியல் செய்யப்பட்டது. ரூ.46 க்கு வெளியிடப்பட்ட பங்குகள் முதல் நாள் 62 வரை விற்கப்பட்டது. பரவலாக போட்டவர்கள் எல்லாருக்கும் கிடைத்த வெளியீடு இது. ஆதலால், எல்லாரும் லாபம் அடைந்தனர். வெள்ளியன்று முடிவடைந்த 'ஓமேக்ஷ்' என்ற டில்லியைச் சேர்ந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் புதிய வெளியீடு 70 தடவைகளுக்கு மேல் செலுத்தப்பட்டு உள்ளது. பங்குகள் கிடைப்பவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். சமீப காலமாக யாரும் வேண்டாத கன்ஸ்ட்ரக்ஷன், சிமென்ட் போன்ற துறைகள் மறுபடியும் விருப்பமான துறைகளாக கருதப்படுகிறது.

இத் துறைகளின் பங்கு விலைகள் கூடிக் கொண்டே போகிறது. சந்தை மிகவும் கீழே இறங்குமா? இது ஒரு பெரிய கேள்விக் குறிதான். இந்திய பங்குச் சந்தை உலகச் சந்தைகளின் போக்கிலேயே போவதால், உலகளவில் ஏதேனும் கரெக்ஷன் வருமானால் அது இங்கேயும் எதிரொலிக்கும். அதுவரை மேலே செல்ல வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும்'நிப்டி' க்கும் 'நிப்டி பியூச்சரு'க்கும் புள்ளிகள் வித்தியாசம் இருப்பதால் பங்குச் சந்தை ஆட்டம் காண்பதற்கு அறிகுறியாக இருக்கலாம் அனுபவஸ்தர்கள் கோடிட்டு காட்டுகின்றனர். சீனா வட்டி வீதங்களை கூட்டி உள்ளது என்ற செய்தி வெள்ளியன்று சந்தை முடிவடைந்த பிறகு வந்த செய்தி. மேலும், பண வீக்கம் 4.27 சதவீத அளவில் உள்ளது என்பதாகும். இவை பங்குச் சந்தையை திங்களன்று எவ்வாறு பாதிக்கப் போகிறது என்று காத்திருந்து பார்க்க வேண்டும்.



2 comments:

said...

You cpopied it from dinamalarbiz.com ...put cortesy: dinamalarbiz.com at the bottom of the matter.

Anonymous said...

sir
i am a frsher to share market
i d'not know about share market
pls send detail about share market in tamil
send it to my email id
sran.nithya@gmail.com

quickly!